திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.35 திருவெண்காடு - திருத்தாண்டகம்
தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
    சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
    பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
    நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.
1
பாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர்
    பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
    ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
    ஒத்துலக மெல்லா மொடுங்கி யபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.
2
நென்னலையோர் ஓடேத்திப் பிச்சைக் கென்று
    வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்
அந்திலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்
    அருகே வருவார்போல் நோக்கு கின்றார்
நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ
    என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி யாடும்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.
3
ஆகத் துமையடக்கி ஆறு சூடி
    ஐவா யரவசைத்தங் கானே றேறிப்
போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்
    புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
    பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.
4
கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங்
    கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல
    உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
கள்ள விழிவிழிப்பர் காணாக் கண்ணாற்
    கண்ணுளார் போலே கரந்து நிற்பர்
வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.
5
தொட்டிலங்கு சூலத்தார் மழுவா ளேந்திச்
    சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்
    பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாராற்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக்
    கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6
பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக்
    கோள்நாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்
உண்பா ருறங்குவார் ஒவ்வா நங்காய்
    உண்பதுவும் நஞ்சன்றே லோபி யுண்ணார்
பண்பா லவிர்சடையர் பற்றி நோக்கிப்
    பாலைப் பரிசழியப் பேசு கின்றார்
விண்பால் மதிசூடி வேத மோதி
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.
7
மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு
    வானவரும் மாலயனுங் கூடித் தங்கள்
சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித்
    தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக்
கருதுங்கொல் எம்பெருமான் செய்குற் றேவல்
    என்பார்க்கு வேண்டும் வரங் கொடுத்து
விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.
8
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
    காணார் பொறியழலாய் நின்றான் றன்னை
உள்ளானை யொன்றலா உருவி னானை
    உலகுக் கொருவிளக்காய் நின்றான் றன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும்
    ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.
9
மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி
    மாவேழம் வில்லா மதித்தான் றன்னை
நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க
    நொடிவரையில் நோவ விழித்தான் றன்னைக்
காக்குங் கடலிலங்கைக் கோமான் றன்னைக்
    கதிர்முடியங் கண்ணும் பிதுங்க வூன்றி
வீக்கந் தவிர்த்த விரலார் போலும்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com